Family

சிங்கப்பூர்த் தீவு கதைகள்

புலாவ் உபின் மற்றும் குசு தீவின் கதைகள்

Calendar

Published: 7 Jul 2022


Time taken : >15mins

சிங்கப்பூர் என்பது 64 தீவுகளால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியுமா? தங்களின் சொந்த புனைவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் உட்பட அவற்றில் பெரும்பாலானவை  வளமான வரலாறுகளையும் கதைகளையும் கொண்டுள்ளன. புலாவ் உபின் மற்றும் குசு தீவின் மூலக் கதைகளை ஆராய்ந்து, பின்பு கீழே தரவிறக்கம் ஆகக்கூடிய  பயிற்சித் தாள்களிள் ஈடுபாடு காட்டுங்கள்!


புலாவ் உபின்: யானை, பன்றி மற்றும் தவளை

வெகு காலத்திற்கு முன்பு சிங்கப்பூரின் வடகிழக்கு காடுகளில் ஒரு யானை, ஒரு பன்றி, ஒரு தவளை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. ஒரு சூடான நாளில், வெப்பத்தை தணித்துக் கொள்ள அவை கடற்கரைக்குச் செல்ல முடிவு செய்தன.

அவை மெதுவாக கடலுக்குள் சென்றன, குளிர்ந்த நீர் அவற்றின் உடம்பைத் தொட்டதும் சூடு தணிந்த ஆனந்தத்தில் அவை பெருமூச்சு விட்டன. அவை ஒன்றின் மேல் ஒன்று தண்ணீரைத் தெளித்து குதூகலித்தன. அப்பொழுது தவளை திடீரென்று யானை மற்றும் பன்றியின் பக்கம் திரும்பி, "நான் பந்தயம் கட்டுகிறேன், இங்கு நான்தான் ஒரு சிறந்த நீச்சல் வீரன். முக்கியமாக, எனக்கு தோலால் இணைக்கப்பட்ட கால் விரல்களும் (webbed limbs) வழுவழுப்பான தோலும் உள்ளன. நான் நீந்துவதற்காக்க படைக்கப்பட்டவன்!” என்றது.

யானை தவளையை பரிகாசம் செய்தது, “ஆனால் நீ மிகவும் சிறியவன்! நான்தான் மிகவும் வலிமையான நீச்சல் வீரன், குறிப்பாக கடலில். எனக்கு சக்திவாய்ந்த கால்கள் உள்ளன. மேலும் எனக்கு தண்ணீருக்கு மேலே சுவாசிக்க வசதியாக மூக்கும் உள்ளது." என்றது யானை. கடைசியாக பன்றி சிணுங்கியது, “என்னை ஒதுக்கி விடாதீர்கள்! என் கால்கள் வேண்டுமானால் குட்டையாக இருக்கலாம், ஆனால் என்னால் நீண்ட நேரம் நீந்த முடியும்." என்றது.

தவளை யானையையும் பன்றியையும் அவநம்பிக்கையுடன் முன்னும் பின்னுமாக பார்த்தது. இறுதியாக, “இந்த வாக்குவாதத்தை ஒரு பந்தயம் வைத்து தீர்த்துக் கொள்வோம். எவர் அக்கரையை முதலில் நீந்தி அடைகிறாரோ அவரே சிறந்த நீச்சல் வீரராக அறிவிக்கப்படுவார்!" என்றது தவளை. இதை ஒப்புக்கொண்டு மூன்று விலங்கு நண்பர்களும் ,  தண்ணீரின் ஓரத்தை நோக்கி விரைந்து சென்று, மீண்டும் தண்ணீரில் குதிக்கத் தயாரானார்கள். "உங்கள் இலக்கில் நில்ளுங்கள், தயாராகுங்கள்... செல்லுங்கள்!" என்று பன்றி கத்தியது, நண்பர்கள் தண்ணீருக்குள் பாய்ந்ததும் இன்னும் வேகமாக கூச்சலிட்டது.

விலங்குகள் ஆவேசமாக நீந்தின, ஒவ்வொன்றும் மற்றவற்றை வெல்ல தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டன. போட்டியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்ததால் அலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவை கவனிக்கவில்லை, அது அவர்களுக்கு எதிராக போய்க் கொண்டிருந்தது.

தவளை, மிகச் சிறிய விலங்காக இருந்ததால், நீரோட்டத்தின் விளைவுகளை உணரத் தொடங்கியது. “ஐயகோ, நான் மூழ்கிவிடப் போகிறேனே!” என்று கலங்கியது. இயலாமையால் அதன் கால்கள் தள்ளாடின. யானை மற்றும் பன்றியுடன் தொடர்ந்து செல்ல முடியவில்லை.

அதிகமாக போராடியதால் மிகுந்த சோர்வுக்குள்ளாகி இறுதியில் அலையால் அடித்துச் செல்லப்பட்டது. அப்படி அடித்துச் செல்லப்பட்ட தவளை ஒரு சிறிய தீவாக மாறியது. அதுதான் இப்பொழுது ‘புலாவ் செகுடு’ (Frog Island) என்று அழைக்கப்படுகிறது.

யானையும் பன்றியும் போட்டியில் மும்முரமாக இருந்ததால் அவை தங்கள் தவளை நண்பன் துயரத்தில் இருந்ததைக் கவனிக்கவில்லை. இரண்டும் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் இருந்தாலும் போட்டியில் இருந்து பின்வாங்காமல் மிகவும் பிடிவாதமாக, அவை உறுதிப்பாட்டுடன் முன்னேறிச் சென்றன.

சிறிது நேரத்திற்கு பிறகு, இரு  உயிரினமும் மேலும் நீந்த முடியாமல் மிகவும் சோர்வாகி, நடுக்கடலில் மயங்கி விழுந்தன. அவை வடக்கு திசையில் மிதந்து சென்று,  இறுதியில் அவற்றின் உடல்கள் தீவுகளாகவும் மாறிப்போயின. இன்றைய புலாவ் உபின் (Pulau Ubin) உருவானது அப்படித்தான்.

இந்த கதை புலாவ் உபினின் வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. தன்னிகழ்வாக, இப்பொழுது புலாவ் உபினின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாறைகள் ‘பத்து காஜா’ (Elephant's Rock) மற்றும் ‘பத்து பாபி’ (Pig's Rock) என்று தீவில் வசிப்பவர்களால் அழைக்கப்படுகின்றன. அருகிலுள்ள புலாவ் செகுடுவில் ‘பத்து கோடோக்’ (Toad's Rock) உள்ளது. இதுவும் கூட கிராமவாசிகளால் புலாவ் செகோடோக் (One Toad Island) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் கதைக்கு உதவிய வான்ஸ் உபின் ஜர்னலுக்கு சிறப்பு நன்றி. இந்த பழங்கதையைப் பற்றி மேலும் வாசிக்க இங்கே செல்லவும்.

குசு தீவு: மீனவர்களும் ஆமையும்

முன்பொரு காலத்தில், இரு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களிடம் இருவருக்கும் போதுமானதாக ஒரு சிறிய மரப்படகு மட்டுமே இருந்தது.

அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு புயல் வந்தது, இதனால் பேரலைகள் எழும்பி அவர்களின் சிறிய படகின் மீது பயங்கரமாக மோதின. இரண்டு பேரும் நம்பமுடியாத அளவுக்கு பயந்துபோய், தங்களின் துடுப்புகளையும் படகின் பக்கங்களையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர்.

புயலால் பொங்கி எழுந்த கடலைப் பார்த்து பயத்தில் இருவரும் கண்களை மூடிக்கொண்டனர். ஒரு பெரிய அலை அவர்கள் மீது மோதி, அவர்களின் பலவீனமான படகைக் கவிழ்த்து, துண்டு துண்டாக சிதறடித்தது. மீனவர்கள் கடலில் தூக்கி எறியப்பட்டு, குழம்பிய கடலில் அலைக்கழிக்கப்பட்டனர். சிதைந்த படகில் இருந்த மரப்பலகைகளை பிடித்துக் கொண்டு சமாளித்தபடி, தம்மீது பாய்ந்த அலைகளைக் கண்டு அவர்கள் பயத்தில் அலறினர்.

தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த ஆமை ஒன்று அவலத்தில் இருந்த இருவரையும் பார்த்தது. அவர்களுக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்து கலக்கம் அடைந்து, அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று திகைத்தது.

"நான் என்ன செய்ய வேண்டும்? இப்படியே புயல் தொடர்ந்தால் விரைவில் அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்கள் கரைக்கு அருகிலும் இல்லை, அவர்களைக் காப்பாற்ற கடலில் வேறு படகுகளும் இல்லை." என்று ஆமை எண்ணியது.

அவர்களுக்கு உதவ தன்னால் என்ன செய்யமுடியும் என்று தீவிரமாக யோசித்தபடி ஆமை மீனவர்களை  நோக்கி நீந்தியது. அது தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, தன் உடம்பை விரிவடையத் தயாராக்கியது. இறுதியாக, வெற்றியும் பெற்றது. இதைப் பார்த்து மீனவர்கள் இருவரும் வியப்படைந்தனர், ஆயினும் இப்போது ஒரு தீவாக மாறியிருந்த ஆமையின் உடலில் விரைவாக கரை ஏறினர்.

இந்த தீவின் திடீர் தோற்றத்தால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்த மற்ற மீனவர்களால் அவர்கள் இறுதியில் மீட்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஆமைக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். தங்கள் நன்றியை தெரிவிக்க அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை அத்தீவிற்கு வந்து சென்றார்கள். மேலும் தங்களது நம்பிக்கைகளின்படி தீவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களையும் கட்டினார்கள், ஒன்று முஸ்லிம் கெராமட் (shrine) மற்றொன்று ஒரு தாவோயிஸ்ட் கோயில். காலப்போக்கில், இத்தீவு அப்பகுதி முழுவதிலும் உள்ள மக்களின் புனித யாத்திரை ஸ்தலமாக மாறியது. இவ்வாறு ஆண்டுதோறும் குசு புனித யாத்திரை காலம் இருப்பது இன்று நமக்குத் தெரியும்.

நீங்கள் கதைகளை ரசித்தீர்களா? சிங்கப்பூரின் வனவிலங்குகளைப் பற்றி மேலும் அறியவும் மற்றும் கீழே உள்ள பயிற்சித்தாள்களைப் பயன்படுத்தி உங்கள் சொந்தக் கதையை எழுதவும்!

ஓவியம்: டிஃபனி மௌலிடா ரசூலியா

இங்கே செயல்பாட்டுத் தாள்களை பதிவிறக்கம் செய்யவும்
நீங்கள் செய்ய வேண்டிய 3 கட்டுரைகளில் 3 இந்த மாதம் மீதம் உள்ளது. இலவச ‘எஸ்பிளனேட்&மி கணக்கை உருவாக்க அல்லது தொடர உள்நுழையவும். பதிவு செய்க / உள்நுழைய