Family

தலிம் குமாரின் கதை

காதலும் விதியும் இழைந்த கதை

Calendar

Published: 8 Jul 2022


Time taken : >15mins

இந்திய துணைக்கண்டமானது  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளுடன் உலகின் மிகவும் உயரிய கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த நிலப்பரப்பு ஆகும். பெரும்பாலான பிராந்தியங்களைப் போலவே, இந்திய துணைக்கண்டமும் தன் சொந்த நாட்டுப்புறக் கதைகளையும்  புராணக்கதைகளையும் கொண்டுள்ளது. இவை கதைசொல்லிகளாலும் வாய்மொழி மரபினாலும் வழிவழியாக கொண்டுவரப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில், பெரும்பாலான இந்தக் கதைகள் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

இக்குறிப்பிட்ட வங்காளக் கதை, 'உயிரின் ரகசியம்' லால் பிஹாரி டேயின் வங்க நாட்டுப்புறக்கதைகள் ஒன்றின் சிறு தழுவலாகும். இக்கதையின் நாயகன் இளவரசன் தலிம் குமார். இதன் மூல வங்காள பதிப்பு இளவரசனை இரு பெரிய சிறகுகள் கொண்ட குதிரையில் பறக்கும் போர்வீரனாக சித்தரிக்கிறது.

அவனது பயணத்தைத் தொடர்ந்து, கீழே உள்ள எங்கள் பயிற்சித் தாள்களில் வங்காளக் கலைகள் மற்றும் கைவினை வடிவங்களைப் பற்றி மேலும் அறியவும்!


முன்பொரு காலத்தில் ஒரு ராஜா (king) இருந்தார், அவருக்கு டுவோ மற்றும் சுவோ என்று இரண்டு ராணிகள் (queens) இருந்தனர். சுவோ ராணிக்கு தலிம் குமார் என்ற ஒரு அழகான நன்நடத்தையுள்ள மகன் இருந்தான். அவன் ஒரு ரிஷியின் ஆசீர்வாதத்தால் அவனது பெற்றோருக்கு மகனாகப் பிறந்தான். எனினும், தலிம் குமாரின் வாழ்க்கையில் ஒரு ரகசியம் இருந்தது, அது அவன் தாய்க்கு மட்டுமே தெரியும்.

தலிம் குமாருக்கு புறாக்களுடன் விளையாடுவதில் விருப்பம் இருந்தது. புறாக்களுக்கு உணவளித்து அவற்றை முற்றத்தைச் சுற்றி துரத்துவதில் அவனுக்கு அலாதி ஆனந்தம். அப்படி விளையாடும்போது, ஒருநாள்  புறாக்கள் டுவோ ராணியின் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுவிட்டன. தலிமின் தாய் இளவரசனை டுவோ ராணிக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார். ஆனாலும் இளவரசன் தனது புறாக்களை திரும்பப் பெற விரும்பி ராணியை அணுகினான். 

டுவோ ராணி, அழகாக இருந்தபோதும், கனிவான நபர் கிடையாது. சுவோ ராணி மீது பொறாமை கொண்டவளாக இருந்தாள். ஏனெனில் தலிம் குமாரைப் பெற்றெடுத்த பிறகு சுவோ ராணி மன்னரின் பேரன்புக்குரியவளாகிவிட்டதாக அவள் நம்பினாள். டுவோ ராணி தலிம் குமாரின் ரகசியம் பற்றிய வதந்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறாள், அது என்ன என்பதை அறிய விரும்பினாள். எனவே புறாக்களைத் தேடி இளவரசன், டுவோ ராணியின்  குடியிருப்புப் பகுதிக்குள் அலைந்தபொழுது, ராணி அவனை நிறுத்தி, “இளவரசரே, உங்கள் புறாக்களை நான் திருப்பித் தருகிறேன். ஆனால் அதற்கு முன்பு, உங்கள் உயிரின் ரகசியத்தை என்னிடம் சொல்ல வேண்டும்." என்றாள்.

இளவரசன், இளம் பருவம் என்பதால், குழப்பத்துடன் டுவோ ராணியைப் பார்த்தான். “ரகசியமா? என் உயிரில் எந்த ரகசியமும் இல்லையே!.” என்றான்.

“உன் அம்மாவிடம் கேள், அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னால்தான், நான் புறாக்களைத் திருப்பித் தருவேன்." என்று டுவோ ராணி வலியுறுத்தினாள். அதற்கு இணங்கி இளவரசன் அம்மாவைத் தேடிச் சென்றான்.

இளவரசன் கேட்டபொழுது, சுவோ ராணி ஆச்சரியமடைந்தார், ஆனாலும் மகனிடம்  உண்மையை மறுக்க முடியவில்லை. இளவரசன் தலிம் குமார் ஒரு விசேஷ ஆசியின் மூலம் பிறந்தவன் என்பதால், அவனது உயிர் அரண்மனை முற்றத்தில் உள்ள குளத்தில் நீந்தும் கெளுத்தி மீன் வயிற்றில் இருக்கும்  தங்க அட்டிகையில் (necklace) பிணைக்கப்பட்டுள்ள ரகசியத்தைக் கூறினார் சுவோ ராணி.

இளவரசன் உடனடியாக தனது புறாக்களை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் இந்த ரகசியத்தை டுவோ ராணியிடம் கூற ஓடினான். ரகசியத்தை அறிந்த டுவோ ராணி மகிழ்ச்சியுடன் புறாக்களை விடுவித்தாள், உடனடியாக இளவரனின் உயிர் இருக்கும் அந்த அட்டிகையை எப்படி அபகரிப்பது என்று யோசித்தாள். யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் மீனைப் பிடித்து, விடிந்ததும் தன்னிடம் கொடுக்கும்படி தன் விசுவாசமான வேலைக்காரனுக்கு உத்தரவு போட்டாள். அவனும் அப்படியே செய்தான்.

மீன் கிடைத்தவுடன் டுவோ ராணி உடனடியாக அதன் வயிற்றைப் பிளந்து, பளபளக்கும் தங்க அட்டிகையை வெளியிலெடுத்து, வெற்றிக்களிப்புடன் அதை தன் கைகைகளில் ஏந்தினாள். அப்போது, சாப்பாட்டு அறையில்  ராஜா மற்றும் சுவோ ராணியுடன் காலை உணவருந்திக் கொண்டிருந்த தலிம் குமார், திடீரென பலவீனம் அடைந்து வெளிறிய முகத்துடன் கையிலிருந்த பழத்தை நழுவவிட்டான்.

மேலும் டுவோ ராணி அட்டிகையை தன் கழுத்தில் அணிந்ததும், தலிம் குமார் மயங்கி விழுந்து மூச்சு நின்றது. அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், உடனடியாக மருத்துவர்களை அழைத்தனர். இளவரசனை சோதித்த   மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகக் அறிவித்தனர், இது ராஜா மற்றும் ராணி சுவோவுக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அதிர்ச்சியாலும் விரக்தியாலும், ராஜா தனது மகனை தகனம் செய்ய மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவனது உடலை அரண்மனையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் ஒரு காலியான வீட்டிற்கு மாற்ற உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ராணி சுவோவின் பார்வையை ராஜாவால் தாங்கவே முடியவில்லை. அதிலிருந்த பிரிவுத் துயரம் இவருக்கு மகனை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. எனவே அவர் டுவோ ராணியுட ன் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார். துஷ்ட ராணி இதில் மகிழ்ச்சியடைந்தாள், ஆனாலும் கூட ராஜா உண்மையைக் கண்டுபிடித்துவிடுவாரோ என்று பயப்படவும் செய்தாள். இதனால் ஒவ்வொரு இரவும் தங்க அட்டிகையை கழுத்திலிருந்து கழட்டி ராஜாவின் கண்ணில் படாதவாறு ஒரு நகைப் பெட்டியில் ஒளித்து வைத்தாள் டுவோ ராணி.

டுவோ ராணி தனது அட்டிகையை கழற்றும் போதெல்லாம், தலிம் குமார் தனது புதிய வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுவான். முதலில் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான். தனது பெற்றோரைப் பார்த்து டுவோ ராணி சூழ்ச்சி செய்து அவனது உயிரின் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட விஷயத்தை சொல்ல விரும்பினான். ஆனால், வீடும்  தோட்டமும் உயரமான மதிற்சுவர்களால் சூழப்பட்டு அதன் பிரமாண்ட வாயிற்கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது. எனவே அவனால் வெளியேற முடியவில்லை. காலப்போக்கில் இளவரசன் தனது புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தோட்டத்தின் பல மரங்களிலிருந்த கனிகளையும் இலைகளையும் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆண்டுகள் பல கடந்தன, தலிம் குமார் ஒரு அழகான இளைஞனாக வளர்ந்தான். ஒரு நாள் இரவு தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த பொழுது  உயரமான வாயிற்கதவை உடைத்துக்கொண்டு ஒரு உருவம் உள்ளே வருவதைப் பார்த்தான். அருகில் வந்த பொழுது அது ஒரு அழகான இளம்பெண் என்பதை அறிந்தான். முதல் பார்வையிலேயே அவள்மேல் காதல் வந்தது. சுராய் பாய் என்ற அந்தப் பெண்ணும் அழகான இளவரசன் மேல் காதல் வயப்பட்டாள்.

இதில் ஒரு பெரிய திருப்பம் என்னவென்றால், இந்த ஜோடி சந்திக்க வேண்டுமென்பதுதான் விதி. சுராய் பாய்க்கு 'இறந்தும் வாழ்ந்தும்' கொண்டிருப்பவன் தான் மாப்பிள்ளையாக வருவான் என்பது அருள்வாக்கு. இதனால் அச்சமுற்ற சுராய் பாயின் தாய் இந்த மோசமான தீர்க்கதரிசனம் உண்மையாகக் கூடாது என்ற நோக்கத்தில் தன் மகள் திருமண வயதை அடைந்தவுடன் அவளை தொலைவாக அனுப்பிவிட்டாள். சுராய் பாயும் இளவரசனும் தங்கள் கதைகளை பரிமாறிக் கொண்ட போது தாங்கள் ஒருவருக்காக இன்னொருவர் படைக்கப்பட்டதை அறிந்து, உடனே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும் சில வருடங்கள் கடந்தன. இப்போது தலிம் குமார் மற்றும் சுராய் பாய் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் சுராய் பாய் அவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள காட்டிலிருந்து தேடிக் கொண்டுவரும் உணவைக் கொண்டு குடும்பம் வாழ்ந்துவந்தது. டுவோ ராணி அட்டிகையை அணியும் பகல் நேரம் முழுதும் தலிம் குமார் மயக்க நிலையிலேயே இருந்தான். குடும்பம் முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும், விரைவில், இந்த விசித்திரமான ஏகாந்த (lonely) வாழ்க்கையால் அவர்கள் சோர்வடைந்தனர். தங்களுக்கு இயல்பு வாழ்வு கிடைக்கவேண்டும் என்பதற்காக அந்த தங்க அட்டிகையை எப்படி திருப்பிக் கொண்டு வருவது என்று ஒரு நாள் இரவு, தலிம் குமாரும் சுராய் பாயும் திட்டம் தீட்டினர்.

டுவோ ராணி, சுராய் பாயை இதற்கு முன் சந்தித்ததில்லை என்பதால், சுராய் பாயை ஒரு சிகையலங்கார நிபுணர் என்று நடிக்க வைத்து டுவோ ராணிக்கு சேவைகளை வழங்க முடிவு செய்தனர்.  அவ்வாறு செய்வதில் சுராய் பாய் வெற்றி பெற்று, மெதுவாக டுவோ ராணியின் நம்பிக்கையையையும் பெற்றாள். எப்பொழுதும் தங்க அட்டிகையை தன் கழுத்திலேயே அணிந்திருக்கும் டுவோ ராணி, சுராய் பாய் தனக்கு சிகை அலங்கரிக்கும்போது மட்டும் அதைக் கழற்றிவைத்தாள்.

பல மாதங்களுக்குப் பிறகு, டுவோ ராணிக்கு சுராய் பாயின் மீது நம்பிக்கை மேலும் வளர்ந்ததும், அந்த இளம் பெண் தன் மூத்த மகனையும் தன்னுடன் ராணியின் வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினாள். ஒரு நாள், டுவோ ராணிக்கு சிகை அலங்காரம் செய்துகொண்டிருந்தபோது, சுராய் பாயின் மகன் தங்க அட்டிகையை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். சிகை அலங்காரம் முடிந்து தாயும் மகனும் கிளம்பும் நேரம் வந்ததும், சிறுவன் அந்த அட்டிகை (necklace) இல்லாமல் போக மாட்டேன் என்று அழுது புரண்டு பிடிவாதம் பிடித்தான்.

உடனே தன் மகனின் செயலுக்காக சுராய் பாய் மன்னிப்பு கோரினாள். இன்று ஒரு நாள் மட்டும் அட்டிகையை எடுத்து செல்ல அனுமதிக்குமாறும் மறுநாள் அதை திருப்பித் தந்து விடுவதாகவும் கூறி கெஞ்சினாள். ராணிக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், இளவரசனின் உடல் கொண்டு செல்லப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால், அவன் இறந்திருப்பான் என்று நம்பினாள். எனவே சுராய் பாயின் மகன் அட்டிகையை அன்று மட்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தாள்.

சுராய் பாயும் அவளது மகனும் வேகமாக வெளியேறி தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். மகிழ்ச்சியுடன் அட்டிகையை தலிம் குமாரின் கழுத்தில் அணிவித்து இளவரசனின் உயிரை நிரந்தரமாக மீட்டெடுத்தனர். குடும்பத்தினர் துரிதமாக அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது, டுவோ ராணிதான் அவர்களை முதலில் பார்த்தாள், அதிர்ச்சியில் கிட்டத்தட்ட மயக்கமுற்றாள். தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாள். தான் பிடிபட்டு தண்டிக்கப்படுவதற்குள் அரண்மனையை விட்டு தப்பி ஓட முடிவுசெய்தாள்.

அரண்மனைக்கு வெளியே வந்து, சுவோ ராணியும் ராஜாவும் தங்கள் மகனையும் அவனது புதிய குடும்பத்தையும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்றனர். அவர்கள் மீண்டும் இணைந்ததில் பேரானந்தம் அடைந்தனர். இளவரசன் தலிம் குமாருக்கு அற்புதமான மறுவாழ்வு கிடைத்ததற்தாக   இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

இங்கே செயல்பாட்டுத் தாள்களை பதிவிறக்கம் செய்யவும்
நீங்கள் செய்ய வேண்டிய 3 கட்டுரைகளில் 3 இந்த மாதம் மீதம் உள்ளது. இலவச ‘எஸ்பிளனேட்&மி கணக்கை உருவாக்க அல்லது தொடர உள்நுழையவும். பதிவு செய்க / உள்நுழைய